-
இச்சிறுகதை, “உரையாடல் சிறுகதைப் போட்டியில்” ரூபாய் 1500/- பரிசு பெற்றது. “கிழக்குப் பதிப்பகம்” தொகுப்பிலும் இடம் பெற்றது.
நின்றிருந்த எல்லோருக்கும் ரத்த அழுத்தம் எகிறிப் போயிருந்தது. கம்பெனியின் ரீஜனல் மேனேஜர் பற்களைக் கடித்தபடி மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்.
“பொருட்காட்சி ஆரம்பிக்க ஏழு நிமிஷம்தான்யா இருக்கு. எங்கய்யா நம்மளோட அழகான பிராண்ட் அம்பாசிடர் நடிகை?” லயசன் ஆஃபீசர் காதிலிருந்து கைபேசியை எடுக்காமல், ”வந்துகிட்டே இருக்காங்க சார். ஏதோ டிராஃபிக்ல கார் மாட்டியிருக்கலாம்” என்று கெஞ்சுகிற குரலில் சொன்னார்.
”காண்ட்ராக்ட்ல என்ன கண்டிஷன்?”
“எட்டு அம்பத்தைஞ்சுக்கு வரலைன்னா அக்ரிமெண்ட் கேன்சல் ஆயிடும் சார். இன்னும் ஒரு நிமிஷம்தான்… பாஸ்! மேடம் வந்துட்டாங்க!” ஓடிப்போய் டாட்டா இண்டிகாவின் கதவைத் திறந்துவிட்டார்.
முகத்தில் எவ்வித உணர்ச்சியுமின்றி இறங்கினாள், துணை நடிகை சாஹித்யா. நடிகையைப் பார்க்க கூட்டம் கூடிவிட்டது. ஷோரூம் ஊழியர்கள் எல்லோருக்கும் உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டது! பணிவுடன் டிரேவில் வைத்து நீட்டப்பட்ட கத்திரியை எடுத்து இயந்திரமாய் ரிப்பனை வெட்டினாள்.
“ராகவன், கூட்டம் கலையறதுக்குள்ள அவங்களை நம்ம ப்ராடக்ட் பத்தி நாலுவரி பேசச் சொல்லுங்க!”
”வாட்? நான் பேசணுமா? முதல்ல எனக்கு எக்ஸ்ப்ளைண் பண்ணுங்க.”
ரீஜனல் மேனேஜர் தலையிலடித்துக்கொண்டார். “ராகவன், வாட் ஈஸ் திஸ்? நம்ம மெஷினோட கையேடுகள் போன வாரமே இவங்களுக்குக் குடுத்து க்ளாஸ் எடுத்தோமே? என்னய்யா உயிரை வாங்கறா இவ…?”
“மேடம் இது ஒரு எளிமையான வாஷிங் மெஷின். அவசரத்துக்கு நாலு துணி மட்டும் துவைக்கணும்னா முதல்ல ஒரு பக்கெட்ல துணிகளை வாஷிங் பவுடர் போட்டு ஊறவெக்கணும். அப்புறம்…”
அரைகுறையாய் காதில் வாங்கியபடி, “பை தி வே ராகவன், எனக்கு அசிஸ்டெண்ட்ஸ் யார் யாரு?”
“இவர் உங்க பாடிகார்ட் செக்யூரிட்டி மேடம். ரசிகர்கள் அத்துமீறாம இவர் பாத்துப்பாரு. இந்தப் பொண்ணு உங்க மேக்கப் டச்சப். மினரல் வாட்டர், ஸ்நேக்ஸ், ஜூஸ் எது வேணும்னாலும் இவங்களை கேளுங்க.” என்று வழிந்தார்.
“சரி சொல்லுங்க” என்றாள் நடிகை சாஹித்யா தன் கைக் கடிகாரத்தினை ஸ்டைலாகப் பார்த்தபடி. ”…இந்த ஹாண்டி மெஷினை பக்கெட்லயே பொருத்தி ஆன் பண்ணோம்னா பத்தே நிமிஷத்துல…”
“காண்ட்ரேக்ட்படி அரைமணி நேரத்துக்கு ஒருமுறை அஞ்சு நிமிஷம் எனக்கு ரெஸ்ட், இல்லியா?”
“…அது வந்து, ஆமாம் மேடம்” ராகவன் சொல்லிக்கொண்டிருக்க, மேனேஜர் ஓரமாய் ஒரு நாற்காலியில் போய் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
”ராகவன், இவன் யாரு?”
“இந்தப்பையனும் உங்களுக்கு உதவி செய்வான் மேடம். பேரு நந்தகோபால். மிஷினை இயக்கி, டெமோ காட்டுவான்.”
நடிகை சாஹித்யா, நந்தாவை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். நந்தாவுக்கு இந்த ரெண்டு நாள் துணிதுவைக்கும் வேலைக்கு இருநூறு ரூபாய் கிடைக்கும். நல்லபேர் வாங்கினால் இன்னும் அஞ்சுநாள் வேலை கிடைக்கும். எப்படா டெமோ ஆரம்பிக்கும் என்று அவனுக்குள் பரபரப்பாக இருந்தது.
இதற்குள் அரைமணி நேரம் ஆகிவிட்டதால், மேக்கப் செட்டை எடுத்துக்கொண்டு சாஹித்யா அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுக்க உள்ளே போய்விட்டாள்.
பொருட்காட்சியில், இந்தக் கடைதான் வெறிச்சோடிக் கிடந்தது. குமாரபாளயம் ப்ரோக்கரிடம் ஒரு கிட்னியை விற்றுவிட்டு, தறி ஓட்ட முடியாமல் வீட்டுப் பாயில் சுருண்டு படுத்திருக்கும் ஏழை அப்பா, நந்தாவின் மனதில் ஒருமுறை வந்து போனார்!
சேல்ஸ் கவுண்டரைப் பார்த்தான். ஆர்டர்கள் ஏதுமில்லை. விற்பனை ஒன்றுகூட இல்லை! அவன் மனசாட்சியின் குரல் தெளிவாகவே கேட்டது! ‘நந்தா, இந்த சான்சை மட்டும் வுட்டே, …..க்காளி, உனக்கு சங்குதாண்டி!!!”
ஒரு முடிவுடன் மரத்தினாலான சின்ன மேடையில் ஏறினான். மைக்கைப் பிடித்தான். “ஹலோ, அந்த ஐவரி கலர் சட்டை போட்ட அஜீத்குமார் கொஞ்சம் திரும்புங்க!!” சிரிப்பு அலைமோதியது. “ஷாலினி மேடம், நீங்களும் வாங்க!” அந்தப் பெண்மணி, அநியாயத்திற்கு வெட்கப்பட்டாள்!
”சார், இந்தாங்க, எங்க ப்ராடக்ட் படம் போட்ட இந்த டிஷர்ட் உங்களுக்கு இலவசம்! இதைப் போட்டுகிட்டு ஜம்முன்னு கண்காட்சியை ஒரு ரவுண்ட் வாங்க! அதுக்குள்ள உங்க சந்தன கலர் சட்டையை நாங்க தொவைச்சு, காய வெச்சு, அயர்ன் பண்ணி வைக்கறோம். டெமோ பிடிச்சிருந்தா ஆர்டர் பண்ணுங்க.” பத்து நிமிடத்திற்குள் ஆறுபேர் சட்டையைக் கழட்டிவிட்டான். இளசுகளின் கர்சீஃப்களை ஏறக்குறைய பிடுங்கினான்.
சிடுசிடுவென்று வெளியே வந்த சாஹித்யா, குஷன் சேரில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துவிட்டாள். தன் வாட்சில் பதிநேழாவது தடவையாக நேரம் பார்த்துவிட்டு, “காயத்ரீ, லெமொனேட் கொண்டு வா” என்றாள்.
நந்தா கடையின் முன்னே ”தகிட தகிட” வென்று பாடிக்கொண்டே சோப்புநீரில் துணிகளை முக்கினான். ”…இல்லாத இடுப்பால இடிக்காத, நீ என்ன!” என்று இடுப்பை ஆட்டிக்கொண்டே, மெஷினின் அஜிடேட்டர் எப்படி ரெண்டு திசைகளிலும் சுற்றி துணிகளைத் துவைக்கிறது என்று கூட்டத்திற்கு காட்டினான். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தில் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
கடேசியில் பளிச்சென்ற சந்தன நிற சட்டையை எடுத்து, “….எப்ப்ப்ப்ப்ப்பூபூபூடீடீடீ….” என்று நாலா திசையிலும் சுழன்று காட்டினான். கைத்தட்டல் பின்னியது. செக்யூரிட்டி, விசிலடித்தான்! ”எமகாதகன் சார்! ஒன்பதரைக்குள்ள மொதல் மிஷினை வித்துட்டான்! ஒரு டஜன் ஆளுங்க சட்டையைக் கழட்டிக் குடுத்துட்டு, டெமோ பாக்க ஆவலா காத்திருக்காங்க!”
சாஹித்யா எலுமிச்சை ஜூசைக் குடித்தபடியே செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
வழவழா வண்ண விளம்பரக் கையேடுகளை, நந்தா ஓடி ஓடி விநியோகித்தான். வேண்டாம் என்று மறுத்தவர்களை, “…..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!…” என்று கத்தி சிரிக்க வைத்தான். ஒருவர் தன் சட்டையைக் கழட்டவும், அவரது பையன் தன் சட்டையையும் பேண்டையும் கழட்டி நந்தாவிடம் கொடுத்துவிட்டான்! ஜட்டியுடன் நின்ற மூணு வயசு வாண்டை அவன் அம்மா ரெண்டு மொத்தினாள்.
“பயல் எள்ளுன்னா எண்ணையா நிக்கறானே? அப்படியே அவன் அப்பாவைக் கொண்டிருக்கான்” என்று நந்தா மைக்கில் சொல்லவும், ஒரே களேவரமாகி கூட்டத்தில் ரகளையாகிவிட்டது! ரீஜனல் மேனேஜர், கண்ணில் நீர்வழிய சிரித்துக்கொண்டிருந்தார்!
சாஹித்யா ராகவனைக் கூப்பிட்டு, “நாலு மணிக்கு முடிஞ்சுடுமா? மார்னிங் எனக்கு ஷூட் இருக்கு. ஐ ஹேவ் டு பேக் அப்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
மதிய உணவு இடைவேளை வரை பதிமூணு மிஷின் விற்பனையாகி இருந்தது. நாற்பது பேருக்குமேல் தங்கள் முகவரி, தொலைபேசி எண்களை பதிவு செய்திருந்தார்கள். ஒரு வாரம் கழித்து ஞாபகப்படுத்தினால் வாங்கிக்கொள்வார்கள்.
லஞ்ச் டேபிளில் பேப்பர் நேப்கினை நாசுக்காய் எடுத்த சாஹித்யா, “மெனு நான் அப்ரூவ் பண்ணதுதானே?” என்றாள். க்ளியர் சூப்பில் ஆரம்பித்து, காஜுகதலி, சாலட், தந்தூரி நான், கடாய் க்ரேவி, பிரிஞ்சி, வெள்ளரி ரெய்தா, இத்யாதி, இத்யாதி தாண்டி, ஐஸ்க்ரீம் டெஸர்ட்டில் அவள் லஞ்சை முடித்தபோது, மணி ரெண்டேகால் ஆகிவிட்டது.
திரும்ப வந்து உட்கார்ந்தபோது கூட்டம் சாஹித்யாவைப் பார்த்துக்கொண்டிருக்க, அவள் தன் உள்ளங்கையிலிருந்த சக்கரையில் நனைத்த ஸ்வீட் ஜீராவை கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்!
நந்தா லஞ்சுக்குப் போகவில்லை. அவ்வப்போது ஒரு மரவள்ளி சிப்சை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மேடைக்கு வந்துவிடுவான். ”கூட்டம் கொஞ்சம் குறையட்டும் சார். அப்புறம் சாப்புடறேன்.”
கூட்டம் குறையவே இல்லை. நந்தா போட்ட ஆட்டத்தில் சோப்புக் குமிழிகள் எல்லோர் மேலும் தெரித்தது! பக்கெட் வாஷிங் மெஷின் படமும், முகவரியும் போட்ட நூறாவது டீஷர்ட்டை அவன் ஒரு காதல் ஜோடியின் கையில் திணித்தபோது, ராகவன் மேடையேறி நந்தாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்!
திரும்பி சேல்ஸ் சார்ட்டைப் பார்த்தான். ப்ச்ச! விற்பனை நாப்பத்து ரெண்டுதானா? வெறியுடன் திரும்பி, “கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால் உங்க தோழி உங்களைப் பாக்கும்போது அழுக்கு சட்டை போட்டிருந்தா எப்படி ப்ரதர்? மெஷினே ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் பாஸ்! பேச்சுலர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!” என்று ஒரு காலேஜ் மாணவனின் மூலமாக, விடுதி மாணவர்களின் ஈமெயில் டேட்டாபேசையே பிடித்துவிட்டான்!
நடிகை சாஹித்யா ”ஒரு அரைமணி நேரம் முன்னாடியே நான் போகலாமா?” என்று கேட்டபோது பதில் சொல்ல அருகில் யாருமில்லை. பில்லிங் பிரிண்டரில், க்யூ அதிகமாகி ஜாம் ஆகிவிட்டது! கையினால் ரெண்டு பெண்கள் பில் போட வேண்டியதாகிவிட்டது. கையேடு பாம்ப்லெட் கட்டுகளை பிரித்துக்கொண்டே இருந்தார்கள்.
எட்டரைக்கு ஷட்டர் மூடியபோது, விற்பனை செஞ்சுரியைத் தாண்டியிருந்தது. ”ஒரு வார டார்கெட்ல பாதியை மொதல் நாளே கிராஸ் பண்ணிட்டோம்யா. நந்தா, நாளைக்கு நீ டெமோ பாய் இல்லை. சேல்ஸ் எக்சிக்யூடிவ்! அதான்யா உன்னோட டெசிக்னேஷன்! இந்த வாரம் பூரா உனக்கு வேலையிருக்கு.”
நந்தாவின் மனக்கண்களில், அவன் ஏழை தாவணித் தங்கை சைக்கிளில் காலேஜ் போக ஆரம்பித்தாள்!
அந்தக் கல்லூரி ஆடிடோரியத்தினுள் நந்தா நுழைந்து மேடையேறி கை கூப்பியபோது, மேனேஜ்மெண்ட் மாணவ மாணவியர் சுமார் ஆயிரம் பேர் எழுந்து நின்று கைதட்டினார்கள்.
“ஆரம்பத்தில் ஒரு சாதாரண டெமோ பையனாக ஆரம்பித்த நான், இன்று உங்கள் முன் மாநிலத்தின் விற்பனை மேலாளராக, கம்பெனியின் ஒரு பார்ட்னராக நிற்கிறேன் என்று சொன்னால், அதற்கு வெறும் உழைப்பு மட்டும் காரணமல்ல. நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் ரெண்டு பேர் மீதும் நாம் செலுத்தும் நேர்மையான அன்பு, செய்யும் தொழிலில் சிரத்தை, உள்ளார்ந்த ஆர்வம், ஆகியவைதான் காரணம்”
தன்னுடைய முதல் நாள் பொருட்காட்சி அநுபவத்தினை காமெடியாக விவரித்தார். மாணவர்கள் ஆர்ப்பரித்தனர். “இதோ, என்னுடைய இந்தப் பதவியில் அமர்ந்திருக்க வேண்டியவள் அவளே! எனவே, அந்த நடிகையைப் போல பலர் தவறவிட்ட வாய்ப்புகளை நாம் பற்றிக்கொள்ளும்போதுதான் நம் வெற்றிக் கதைகளை இப்படி பகிர்ந்துகொள்ள முடியும். ஆல் தி பெஸ்ட்!” என்று முடித்தான்.
மெமெண்டோ கொடுக்க வந்த மாணவி, “சார், அந்த நடிகை கடேசில என்ன சார் ஆனாங்க?” என்று காதருகில் வந்து மெல்லிய குரலில் கேட்டாள். நந்தா தன் பர்சை எடுத்து ஒரு செய்திக் குறிப்பைக் காட்டினார். “டி.வி. நடிகை சாஹித்யா தொழிலதிபரை மணந்தார்” என்று பழுப்பு கலரில் இருந்தது.
நந்தா அந்த மாணவியின் காதருகில் போய், “பரஸ்பரம் வாய்ப்புகளை தட்டிப் பறித்த நாங்கள், ஒருவரை ஒருவர் இனிமையாக பழிவாங்கிவிட்டோம்! இப்போ அவங்க, மிசஸ் சாஹித்யா நந்தகோபால்!”
- நந்தவேரன்
‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
முடிவு நச்! சுஜாதாவின் ஒரு சில நகைச்சுவை கதைகளை வாசித்த திருப்தி இருந்தது. கலக்கல்! வாழ்த்துகள்.
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் நந்தவேரன்..
வாழ்த்துகள் நண்பரே !
ரொம்ப ரசிச்சேங்க, அருமையான கதை, கடைசியில் மிகவும் மகிழ்ச்சியாகவிருந்தது, நீங்க சினிமாவில் இருக்கீங்களா
நல்ல வாசிப்பனுபவத்தைப் கொடுத்தது இந்தக் கதை
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.
நல்ல உயிரோட்டத்துடன் எழுதியிருக்கிறீர்கள். கதை நன்றாக இருக்கிறது. பரிசுக்கு வாழ்த்துகள்!!
நன்றி ஒளியவன்! நன்றி வெண்பூ! நன்றி ரெஜோ! நன்றி யாத்ரா! நன்றி டுபுக்கு!
யாத்ரா, நான் சினிமாவில் இல்லை. இணையம் மூலமாக சினிமாவில் நிறைய பேரை நண்பர்களாக அடைந்திருக்கிறேன்.
இந்தப்போட்டி மூலமாக கிடைத்த நண்பர்களை, கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன்! – நந்தவேரன்.
வெற்றிக்கு வாழ்த்துகள் நண்பரே!
-ப்ரியமுடன்
சேரல்
நன்றி, சேரல்…! ”நீர் வழிபடூஉம் புணை” ஆரம்பத்திலேயே படித்தேன். அந்த வலி, அநேக வயோதிகர்கள் அநுபவிப்பதுதான்.
பரிசுக்கு தேர்ந்தெடுத்தது, உங்கள் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம்! வாழ்த்துக்கள் சேரல்…!
வெற்றி பெற்ற கதைகளிலே என்னை கவர்ந்தது இது மட்டும் தான்….வாழ்த்துக்கள்!!!
பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
நன்றி, ஆண்மை குறையேல்! நன்றி, உழவன்!
உற்சாகமூட்டும் அன்பர்களின் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, ஃப்போரம்களில் விவாதித்துக்கொண்டிருந்த நான், முழுநேர எழுத்தாளனாகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது!
- நந்தவேரன்