உலகின் மிக சந்தோஷமான தருணம் எது தெரியுமா? இளங்காலையில் பசுவின் பால்கன்று கயிறவிழ்த்து துள்ளாட்டம் போடுவதைப் பார்ப்பது! கன்றுக்குட்டிக்கு கவலையில்லை! மோகக் குழப்பங்களில்லை! பற்றில்லை! அது துள்ளுவது யோகம்! ஓடுவது தியானம்! அது காண்பதெல்லம் அதற்குப் புதியன!
இதோ இந்த வெளிர் மெரூன் கலர் கன்றுக்குட்டி இருப்பதையெல்லாம் கவிழ்த்துப்போட்டு துள்ளி வருகிறதே, இந்த முற்றமோ, அதை அடுத்த வீடோ, வீட்டின் கதவு எண்ணோ, எண்ணின் முகவரியோ, முகவரியின் ஜூரிஸ்டிக்ஷனோ எதுவும் நமக்கு முக்கியமில்லை. கன்றும், அதன் பசுதாயும், தாயின் மனங்கவர்ந்த அந்த வீட்டின் பைங்கிளி, பதினாறு வயது ஆனந்தியும் நமக்கு முக்கியம்.
இதோ, இப்போது கூட ஆனந்தி கதவைத் திறந்து காய் கனி தோலியோடு சிறிது செம்மண்ணும் சாணமும் கலந்து எருக்குழி நோக்கிச் செல்லும்போது, துள்ளி வந்த கன்றுக்குட்டி, அவள் இடுப்பில் மோதியது. கீழே விழுந்த ஆனந்தியின் சட்டை பாவாடையெல்லாம் சாண செம்மண் அபிஷேகம்!
தொழுவத்திலிருந்த தாய்ப்பசு பதறியது! ஜன்னலில் பார்த்து யாரோ சிரித்தார்கள். பொய்க் கோபத்துடன் எழுந்த ஆனந்தி, இழுத்து செருகிக்கொண்டு கன்றைத் துரத்தினாள்! தாய்ப்பசு மகிழ்ந்தது! நடக்கும் போட்டியில் யார் ஜெயித்தாலும் அதற்கு மகிழ்சியே! துரத்துவது அதன் விருஷ்ணித்தாய்! அதனைப் பராமரிக்கும் மகராசி! துரத்தப்படுவது, தாய்ப்பசுவின் செல்ல மகள்.
ஆனந்தி கன்றைப் பிடித்து நாலு சாத்தியிருப்பாள். ஆனால் அதற்குள் அது கஞ்சிப்பானை முதற்கொண்டு பூந்தொட்டிகள், தண்ணீர்க் குடங்கள் அனைத்தையும் கவிழ்த்துவிடும். எனவே, *இரு, இரு உன்னை அப்புறம் பாத்துக்கறேன்* என்று கறுவிக்கொண்டே பசுவிடம் வந்தாள்.
பசுவை அவிழ்த்து வெளியே முளையில் கட்டினாள். உண்ணி நீக்கினாள். நல்ல பிள்ளை போல நெருங்கி வந்த கன்றைப் பால் குடிக்க விட்டாள். கன்றையும் பசுவையும் ஒரே நேரத்தில் விரல்களால் கோதிவிட்டாள். பசும்புல் கட்டிங்ஸ் மற்றும் சோளத்தட்டையும் கலந்து சிறிது போட்டாள். கலப்புத் தீனியையும் ஊறவைத்த பிண்ணாக்கும் கரைத்து பசுவின் முன் வைத்தாள்.
சரியாக ஒரு நிமிடம் காத்திருந்த ஆனந்தி, கன்றை இழுத்து பசுவின் முகத்தருகே அரையடி கயறு விட்டு கட்டினாள். நீர் தெளித்து மடியைக் கழுவி, எண்ணெய் தடவி, ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட பாத்திரத்தில் சரட் சரட்டெனப் பால் கறக்க ஆரம்பித்தாள். அவளுக்குத் தெரியும். கன்று துள்ளாட்டம் போட்டது, தான் அதை ச்செல்லமாகத் துரத்தியது, கன்றை பால் குடிக்கவிட்டு கோதிவிட்ட மசாஜ், பால்குடி மாறாக் கன்றை அதன் தாய் நக்கிக்கொண்டிருப்பது இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே பாலின் வேகம் நேற்றைவிட இன்று கூடியிருக்கிறதென்று.
(மென்மையான இதயமுடையோர், கவிதை நீதி பார்ப்போர், ஆப்டிமிஸ்ட்டுகள் இந்த இடத்தில் கதையிலிருந்து விலகிவிடவும்)
வழக்கமான நேரத்தைவிட இன்று அதிக நேரம் பால் கறந்ததால் கன்று பசியில் தத்தளித்தது. தாயிடம் கேட்டது, *அம்மா, இன்று எனக்கு பசி அதிகமாயிருக்கிறதே அம்மா?*
*ஆம் கண்ணே! இன்று அதிகம் குதித்தாய். ஓடினாய். நாளை இன்னமும் பசி அதிகரிக்கும்*
*இன்று ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறாள் இந்த ராட்சசி?*
அவள் விருஷ்ணி குலத் தோன்றல். என் தாய்! நாளை உனது தாயாவாள்! அவளை அப்படிச் சொல்லாதே. உன் பால் குடி மறக்கவே அப்படிச் செய்கிறாள். நீ இன்னமும் பால் மட்டும் குடித்துக்கொண்டிருந்தால் பசும்புல் கடிக்க மாட்டாய்*
*நான் ஏன் பால் மறக்க வேண்டும்? நான் என்ன அவள் தாயிடமா சென்று பால் குடிக்கிறேன்? என் தாயிடமிருந்து பிரித்துக் கட்ட இவள் யார்? வேண்டுமென்றால், அவளைப் போய் புல் தின்னச் சொல்*
*ஹேய், உனக்கென்ன ஆச்சு இன்னைக்கு?*
*பின்னென்னம்மா?…..* என்று ஏதோ சொல்ல முனைவதற்குள் ஆனந்தி அதை அவிழ்த்து விட்டாள். ஆவலாய் ஓடி மடி முட்டிய கன்றிற்கு ஏமாற்றம். *பார்த்தாயா அம்மா? ஆழாக்குப் பால்கூட விட்டுவைக்கவில்லை அந்தக் கடங்காரி*
*அப்படிச் சொல்லாதே கண்ணே. நாம்தான் அவளுக்குக் கடன்பட்டிருக்கிறோம். ஈரோட்டுக் கலப்புத் தீவனம், ஆயில்பட்டிப் பிண்ணாக்கு, கோரெண்டு புல், கவண்டல் தழை, அகத்திக் கீரை, கிருமி நீக்கிய மேட்டூர் குடிநீர் என நம்மை எப்படி போஷிக்கிறாள் தெரியுமா?*
*ஒரு லிட்டர் பாலை இருவது ரூவாய்க்கு விற்கிறாள் அது தெரியுமா உனக்கு?*
*கன்றே, பணமிருந்தால்தான் வைக்கோல், இந்த தொழுவம், நம் மருத்துவ செலவு, இவற்றைச் செய்யமுடியும். அது போகட்டும். உச்சி வெய்யிலில் நம்மை குளிர் நீராட்டி சேவை செய்கிறாளே, அதற்கு என்ன விலை கொடுப்பது?*
*இந்த இளிச்சவாய்த்தனம்தான் நம்மை அடிமைத்தனத்தில் கொண்டு விட்டிருக்கிறது. யாருக்கு வேண்டும் இவளது சேவை? நாம் சுதந்திரமாய் இருந்தால், சுய சேவை புரிந்துகொள்வோம்*
*இப்போதும் நாம் சுதந்திரமாகத்தானே இருக்கிறோம்?*
*பூரண சுதந்திரம். மூக்கணாங்கயிற்றைத் தவிர! அது போகட்டும். நம்மிடமிருந்து எதையம்மா இவள் விட்டு வைத்திருக்கிறாள்? பால், இவள் குடிப்பதற்கு. சாணம், வீடு மெழுக, பூஷணிப்பூ வைக்க, எருவாட்டி தட்ட, எருக்குழியில் உரமாக்க, பயோகேஸாக அடுப்பெரிக்க. நம் மூத்திரம், இவளுக்குக் கோமியம். நம் கொம்பு, இவளுக்கு அலங்காரப் பொருள். நம் தோல், இவளுக்கு செருப்பு*
*நம்மை விலை கொடுத்து வாங்கிய மகராசிக்கு, நம்மை முழுமையாய்ப் பயன்படுத்த உரிமையுண்டு*
*இதுதான் பக்கா கொத்தடிமைத்தனம்*
*கன்றே, ஆனந்திக்கு நம் மீது அன்பில்லை என்கிறாயா? அன்பில்லாமலா அவள் எனக்கு யோகலஷ்மி என்று பேரிட்டிருப்பாள்?*
*ஆமாம். நீயிருப்பதால், யோகம் அவளுக்கு! இந்த வீட்டின் இரண்டு பக்க காம்பவுண்ட் சுவரையும் எட்டிப்பார். இந்தத் தெருவிலுள்ள அத்தனை பேரும் தன் மாட்டிற்கு லட்சுமி என்றுதான் பெயரிட்டிருக்கிறார்கள். உனக்கு வெட்கமாயில்லை? அவ்வளவு ஏன்? இன்று என் தோலின் மென்மையையும் வழவழப்பையும் வைத்து என்னை *பாலியஸ்டர்* என்று கொஞ்சும் இதே ஆனந்தி, நான் வளர்ந்ததும் எனக்கும் லட்சுமி என்றுதான் பேர் வைப்பாள்*
*இப்போது நீ என்னதான் சொல்கிறாய்?*
*அவள் வீட்டை அவள் வீட்டார் போட்ட சாணியிலேயே மெழுகிக்கொள்ளச் சொல்கிறேன். ஏன் முறைக்கிறாய்? நாம் இயற்கையோடு ஒன்றி, நமக்குரியதை உண்கிறோம். ஆனால் மனிதன், தனக்குரிய பழங்களையும், நீர்ப்பருப்பையும் விட்டுவிட்டு, எலிகளுக்குரிய தானியம், பன்றிக்குரிய கிழங்கு, ஆட்டுக்குரிய கீரை, புலிக்குரிய மாமிசம், இவற்றை இயற்கைக்கு எதிராக சமைத்து உண்கிறான். எனவேதான் அவன் மலம் மட்டுமல்ல, அவன் கும்பிவாடை கூட துர் நாற்றம் வீசுகிறது. இந்தப் பிரபஞ்சத்திலேயே மற்ற மிருகத்தின் பாலைக் கறந்து குடிக்கும் கேவலம் எந்த இனத்திலம்மா நடக்கிறது? குளம்பு விட்டுச் சொல்லம்மா?*
*கன்றைத் தன் தேரின் காலில் நசுக்கிவிட்ட பட்டத்து இளவரசனை, அதே தேரை ஏற்றிக் கொன்று, நீதியை நிலை நாட்டினானே ஒரு மன்னன்…….!*
*இதையே சொல்லிக்கொண்டு அதன் பின்னர், கோடி மில்லியன் மாடுகளை வெட்டி டின்னில் அடைத்துவிட்டார்கள்*
*நம் காலகால முன்னோர்களின் சிறு ஞாபகத் தீற்றல்களின் ஒட்டுமொத்தக் கொத்து ஒன்று, ஜெனடிக்ஸ் ஏணி வழியாகப் பெர்கொலேட் ஆகி, உன் ஜீன்களில் புகுந்திருக்க வேண்டும்! நீ ஒரே நாளில் இவ்வளவு நன்றி கெட்டவளாயிருக்க முடியாது!*
*நான் நன்றி கெட்டவளா? நாளை நான் பருவமடைவேன். கருத்தரிப்பேன். குட்டி ஈனுவேன். அது பெட்டையென்றால் முடையடித்து, பொலிகாளை வந்து பொலிந்து, அடிமையாவாள். காளையென்றால் காயடிக்கப்பட்டு, பொதி சுமப்பான். என் வாரிசு, பொதியோ, இல்லை பொலியோ சுமக்க நேரிடுமே என்று நான் பதறுவது, நன்றி கெட்ட செயலா?*
ஒரு வருடம் ஓடிப்போனது. கன்று வளர்ந்து, முடையடித்து வேறு விதமாய்க் கத்தியது. அன்று ஏதோ விசேஷ தினமாகையால், பட்டுப் பாவாடை, தாவணியில் இருந்த ஆனந்தி, வழக்கம்போல் தொழுவத்திற்கு வந்தாள்.
*ஏய், ஆனந்தி, உள்ள போ* என்றான் அவள் அண்ணன்.
*மாட்டேன்* என்றாள் பதினேழு வயது ஆனந்தி.
*நம்ம ஞான லட்சுமி ராத்திரிலேர்ந்து முடையடிச்சு, கண்ணாடி ஒழுக்கி, கத்துது. காங்கேயன் காளையைப் புடிச்சு வந்திருக்கான் தம்பி. லட்சுமியை ஊசி போடற வளையத்துல கட்டியாச்சு. நீ உள்ள போ*
*ஞானலஷ்மி அழுதா நான் தொடச்சி விடறேன்* என்று சிரித்துக்கொண்டே வளையத்தின் முன்பக்கம் வந்தாள். *ஹேய், பாலிஸ்டர்!* என்று கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
அன்று விசேஷத்திற்கு வந்திருந்த அத்தை, ஆனந்தியை காரணமேயில்லாமல் அழைத்து அருகில் அமர்த்தி வாசம் பார்த்தாள். ஆனந்திக்கு, காங்கேயன், லட்சுமியை முகர்ந்தது ஞாபகத்தியது.
அத்தைப் பையன் கொயம்பத்தூரில் விவசாயம் படிக்கிறான். இருபத்திரண்டு வயது. ரெட்டைப்படையில் செய்யக்கூடாதாம். அடுத்த வருடம் முடித்துவிடலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.
மேலும் ஒரு வருடம் ஓடிப்போனது. டெம்போ ஒன்று தொழுவத்தின் வாசலுக்கே வந்தது. மஞ்சள் கயிறு கழுத்துடன், பட்டுப் புடவையை இழுத்துச் செருகிய ஆனந்தி, முளையின் கயிறவிழ்த்ததும், ஞான லஷ்மி அடக்கமாகச் சென்று டெம்போவில் ஏறிக் கொண்டது. தாய்ப் பசுவைத் திரும்பிப் பார்த்தது.
*என்ன ஆனந்தக் கண்ணீரா? தண்டவாளப் பெட்டி, காமாட்சி விளக்கு மாதிரி என்னையும், என் பெண்ணையும் சீதனமாகக் கொண்டு போகிறாள்! உயிராக அல்ல. பொருளாக! தன் குழந்தைக்குப் பால் தர திராணியற்ற இவர்கள், நம்மைக் கடவுளாக்கி, கோமாதாவாக்கி, கோதானம் என்று சொல்லி, அவர்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
மனிதன் யாரென்று அவனுக்குத் தெரியாமல் போயிருக்கலாமம்மா! ஆனால், இவன் கூடவே ட்ரில்லியன் வருடங்களாய்ப் பயணித்து வரும் நமக்குத் தெரியுமே அம்மா, இவன் எதிலிருந்து வந்தான் என்று? இவன் திடீரென்று ஒருநாள் ஆடை அணிந்து, மனம் என்ற ஒன்றை அடைந்த நாளிலிருந்துதானே நாம் இவனுக்குக் கடவுளாகிவிட்டோம்? அதுவரை, இவனும் நாமும் ஒரே குட்டையில் யுகாந்தகாலமாய் ஊறிய மட்டைகள்தானே?
என்னால் முடியாமல் போயிருக்கலாம்! ஆனால் என் மன எதிர்காலத்தில், ஒருநாள் ஒரு பசு முளை ஒடிக்கும்! ஒரு காளை கயிறருப்பான்! மில்லியன் வருடம் என்பது பரிணாம கடிகாரத்தில் ஒரு வினாடிதானம்மா! யார் கண்டது? அந்தக் காலம் வரும்போது, இந்த விருஷ்ணி குலமே புலம் பெயர்ந்தோ, புல் முளைத்தோ போயிருக்கும்*
புடவையை இழுத்துச் செருகிய ஆனந்தி, *ஹேய், டெர்லின் ! நில்லுடி* என்று துரத்த, அந்தப் பால்கன்று, புழக்கடையிலிருந்த கழுநீர்ப்பானை, பூந்தொட்டி, தண்ணீர்க் குடங்களையெல்லாம் கவிழ்த்துப்போட்டு ஓடியது.
உலகின் மிக சந்தோஷமான தருணம் எது தெரியுமா? இளங்காலையில் பசுவின் பால்கன்று கயிறவிழ்த்து துள்ளாட்டம் போடுவதையும், அதனைப் புதுமண விருஷ்ணித்தாய் துரத்துவதையும் பார்ப்பது!
